சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு பெற்றோர் இல்லாததை கருத்திற்கொள்ளாது சமமாக கவனியுங்கள் - கல்வி அமைச்சு தேசிய பாடசாலைகளுக்கு ஆலோசனை ..

அச்சிடுக

இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயிலும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் அண்மையில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதன்படி தேசிய பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் சிறுவர்களை ஏனைய மாணவர்களுடன் சமமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்பிரகாரம் சிறுவர் காப்பகங்களில் பெற்றோர் இழந்து தவிக்கும் சிறுவர்களுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இணைந்து கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கும் வகையில் 2019-07-31 ஆம் திகதி 38:2019 இலக்க சுற்றறிக்கையின் ஊடாக அனைத்து தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ளும் போது சிறுவர் காப்பகத்தின் பொறுப்பாளரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பரிசிலனை செய்து கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக வெளியிடப்பட்ட 29:2019 சுற்றறிக்கையின் 4.5 சரத்தின் பிரகாரம் சிறுவர் காப்பகங்களிலுள்ள சிறுவர்களின் பொறுப்பாளராக அநாதை இல்ல பொறுப்பாளர் கருதப்படுவதுடன் முதலாம் வகுப்பு மாணவர்கள் இணைத்துக்கொள்வதற்காக விண்ணபிக்கும் பொறுப்பும் அநாதை இல்ல பொறுப்பாளரும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே சிறுவர் காப்பகங்களில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் சிறுவர்களின் எதிர்கால கல்வி விருத்திக்காக கிடைத்திருக்கும் வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்துமாறு அநாதை இல்ல பொறுப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுகின்றது.