பிந்திய செய்திகள்

புதிய கல்வி சட்டமூலத்தின் ஊடாக  சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கண்காணிப்பு செய்வதற்கான அதிகாரம் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும்

பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 

தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள புதிய கல்வி சட்டமூலத்தின் ஊடாக சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளை கண்காணிப்பு செய்யும் அதிகாரம் கல்வி அமைச்சின் கீழ் உள்வாங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச பாடசாலைகள் தற்போது நிறுவன சட்டமூலத்தில் அல்லது வர்த்தக நாம பதிவு செய்யும் கட்டளைகள் சட்டமூலத்தின் கீழ்  நிறுவனமாக அல்லது வர்த்தகமாக பதிவு செய்யப்படுவதனால் குறித்த பாடசாலைகள் தொடர்பாக சரியான தகவல்கள் கல்வி அமைச்சு வசம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்படாமையினால் , குறித்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளல், கட்டணம் அறவிடல் ,கண்காணிப்பு  போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு கல்வி அமைச்சுக்கு அதிகாரம் இல்லை. இந்நிலையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி சட்டமூலத்தின் ஊடாக  இலங்கையின் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் உட்பட அனைத்து வகையான பாடசாலைகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் அதிகாரம் கல்வி அமைச்சின் கீழ்  உள்வாங்கப்படும். 

அத்துடன் மத்ரஸாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது என்றார்

Search