அபிவிருத்தியன்றி வெறும் காட்சிப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை.

அச்சிடுக
அடுத்த தேர்தல்களின் போது கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக பொது சின்னத்தின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வோம்
                                                       
 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
அரச,தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுரக்சா காப்புறுதியை இலவசமாக வழங்கியுள்ளோம். இதன் கீழ் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக மாத்திரம் ஒரு நாளைக்கு மூவாயிரம் உட்பட 2 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி கிடைக்கும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் சுரக்சா காப்புறுதிக்காக அரச பொறுப்பில் உள்ள 75 வீதமான தொகையை மாணவர்களுக்கு வழங்காவிடின் குறித்த தொகையை மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை காப்புறுதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துஹெர துடுகெமுனு மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனுடன் அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் குருநாகல் கல்வி வலயத்திலுள்ள 20 பாடசாலைகளில் 387 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது முதலாம் வகுப்பின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. எனினும் அதனை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகரித்து கொடுத்தோம். அதேபோன்று அதிபர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் எம்மால் முடிந்தது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாறான வளர்ச்சி போக்கு வரலாற்றில் கூட நடைபெறவில்லை.
அபிவிருத்தியை மாத்திரம் நாம் இலக்காக கொண்டு செயற்படுகின்றோம். அபிவிருத்தியன்றி வெறும் காட்சிப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை. ஊடகங்களையோ அல்லது பொது மக்களையோ அடக்கி ஆளும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை. அடுத்த தேர்தல்களின் போது கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக பொது சின்னத்தின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வோம் என்றார்.