பிந்திய செய்திகள்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக டெப் கணிணி வழங்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த ஒரு சிலர் முயற்சி

  • சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட தரமான டெப் கணிணிகளையே மாணவர்களுக்கு வழங்குவோம்: பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை- கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்


குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கல்வி நவீனமயப்படுத்தும் திட்டங்களை தடுத்து நிறுத்த ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர். டெப் கணிணி வழங்கும் திட்டத்திற்கு சேறு பூசி அதற்கு குந்தகம் விளைவிக்க முனைகின்றனர். உலகத்தின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் நாட்டின் கல்வி துறையை நவீனமயப்படுத்தி மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க முற்படுகின்றோம். சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட தரமான டெப் கணிணிகளையே மாணவர்களுக்கு வழங்குவோம். எனவே டெப் கணிணி தொடர்பாக அரசியல்வாதிகள் முன்வைக்கும் உண்மைக்கு புறம்பான செய்திகளை கேட்டு பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் குழுஅறையில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நவீன தொழில்நுட்பத்துடன் உலகம் அதிக வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது. இரு மாதங்களில் மாற்றம் காணும் அளவிற்கு தொழில்நுட்பத்தின் வேகம் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. அந்த வேகத்துடன் நாமும் இணைந்து பயணிக்க வேண்டும். இதற்காக கல்வி துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க திட்டமிட்டுள்ளோம். எனினும் எதிர்கால தலைமுறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் திட்டத்தை தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ; பெற்றோர், மாணவர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முனைகின்றார். 'சஹ்ரானின் குண்டு வெடிப்புகளை பார்க்கிலும் அகிலவின் டெப் கணிணி பாரதூரமானது' என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.  இந்த கருத்தானது, குறுகிய அரசியல் நோக்கத்திற்காக டெப் கணிணி வழங்கும்; திட்டத்திற்கு சேறு பூசி அதற்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாகும். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி,தரமான டெப் கணிணியை வழங்கவே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் வழங்கவுள்ள டெப் கணிணியில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையையே நாம் இலங்கையிலும் கொண்டு வர முனைகின்றோம். உலகின் பல நாடுகளில் டெப் கணிணி மூலமாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதுமாத்திரமின்றி உதய கம்மன்பில கூட டெப் கணிணி உபயோகம் செய்கின்றார். அப்படியாயின் அவருக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவர் எந்நேரமும் டெப் கணிணி உபயோகம் செய்து வருகின்றார்.

கணிணி தொழில்நுட்பத்தினால் மேலதிமாக தகவல்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். சம்பிரதாய பூர்வமாக பாடப்புத்தகங்களை மாத்திரம் கொண்டு மாணவர்களின் அறிவை வளர்க்க முடியாது. நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு வழங்குவதன் ஊடாக மேலதிக தகவல்களை கொண்டு தொழில்நுட்ப துறையில் முன்னேற முடியும். டெப் கணிணி வழங்கும் முறைமையானது கல்வி அமைச்சின் புரட்சிகரமான நடவடிக்கையாகும். எனவே அரசியல் நோக்கத்திற்காக இதனை தடுக்கவே முயற்சிக்கின்றனர். இந்த நடவடிக்கை காரணமாக அச்சு புத்தகத்திற்கான செலவுகளை கூட குறைக்க முடியும்;. டெப் கணிணி வழங்கும் விடயத்தில் ஒரு சிலருக்கு ஆரம்பித்தில் இருந்தே பிரச்சினை உள்ளது. எனவே இந்த தடைகளை தாண்டி எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக டெப் கணிணியை வழங்குவோம். ஆரம்பத்தில் தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கு வழங்குவதுடன் இன்னும் சில மாதங்களில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் எதிர்காலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

தேசிய பாடசாலைகளுக்கு நுழைய மாணவர்களுக்கு வாய்ப்பு

கல்வி அமைச்சினால் இதுவரை செய்யாத பாரிய புரட்சிகரமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன்படி தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு இதுவரை கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு 45,000 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. தமிழ் மூலமான பாடசாலைகளில் மாத்திரம் 15,000 வெற்றிடங்கள் உள்ளன.  எனினும் நாம் தேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்குள்ள வெற்றிடங்களை ஆராய்ந்து அதன் பின்னர் குறித்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு பாடசாலைகளையும் பெயரிட்டு குறித்த பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புகளிலும் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கையும் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஒழுங்குமுறைகளையும் பத்திரிகைகளில் விளம்பரமாக பிரசுரித்தோம். இதன்படி முதற்கட்டமாக 4000 மாணவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொண்டுள்ளோம்.  இதற்கான அனுமதி பத்திரங்களை குறித்த மாணவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆசிரியர் பயிலுனர்கள் 8000 பேர் இணைப்பு

கல்வியியற் கல்லூரிகளுக்கு முதற்தடவையாக ஒரே தடவையில் ஆசிரியர் பயிலுனர்கள் 8000 பேரை இணைத்துக்கொண்டுள்ளோம். இதற்கான நிகழ்வு இடைநிறுத்தப்பட்டமையினால் தபால் மூலமாக 8000 பேருக்கான நியமனங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புதிய அதிபர்கள் நியமனம்

அத்துடன் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்பு புதிய அதிபர்கள் 2000 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான நிகழ்வினை எம்மால் நடத்த முடியாவிடினும் அவர்களுக்கான நியமன பத்திரங்களை பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 4000 அதிபர்களை பாடசாலை கட்டமைப்பில் இணைத்துக்கொண்டோம். இதுவரையான காலப்பகுதியில் 6000 புதிய அதிபர்களை பாடசாலை கட்டமைப்புக்காக இணைத்துக்கொண்டுள்ளோம். மேலும் அதிபர்களுக்கான பதவி உயர்வுகளையும் முறையாக முன்னெடுத்துள்ளோம். இது கல்வி அமைச்சின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இதற்கு மேலதிகமாக அருகிலுள்ள பாடசாலை சிறந்தப பாடசாலை திட்டத்தின் ஊடாக பாடசாலைகளில் காணப்படும் குறைப்பாடு நிவர்த்தி செய்து வருகின்றோம். நகர பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்கி வருகின்றோம். மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகளையும் நாம் பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம் என்றார்.

Search