பிந்திய செய்திகள்

நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட 250 கட்டடங்கள் நாளை மாணவர்களிடம் கையளிப்பு 

• தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையிலும் கல்வி அமைச்சரின் பங்கேற்றலுடனும் நாளை பேராதனை கல்வியற் கல்லூரியில்...
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வரலாற்றில் முதற்தடவையாக பாடசாலை அபிவிருத்திக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்திட்டமான அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட 250 கட்டடங்கள்  நாளை (04) தேசிய கல்வி கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களினதும் பங்கேற்றலுடன் நாளை காலை 10 மணிக்கு பேராதனை தேசிய கல்வியற் கல்லூரியில் இதற்கான தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஒரே நாளில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் முதற் கட்டமாக மார்ச் மாதம் 200 கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நாளைய தினம் 250 செயற்திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டத்திற்காக 4500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளன. 
இதன்பிரகாரம் ஆரம்ப கற்றல் நிலையம் 68 உம், வகுப்பறை கட்டடங்கள் 52 உம், விஞ்ஞான ஆய்வு கூடங்கள் 22 உம், அதிபர்களுக்கான விடுதி 31 உம், ஆசிரியர்களுக்கான விடுதி 32 உம், தொழில்நுட்ப கட்டடங்கள் 34 உம், சிற்றூண்டி சாலைகள் 9 உம், பல் சிகிச்சை நிலையம் 3 உம் நாளை மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 18,000 செயற்திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அவற்றில் 12,000 பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்காக 65,000 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Search