- வெட்டுப்புள்ளி முறைமை ஒழிப்பு பாரதூரமானது.
வெட்டுப்புள்ளி முறைமை இல்லாதொழிக்க போவதாக கோத்தாபய ராஜபக்ச தனது கொள்கை பிரகடணத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றப்போவதாகவும் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மேற்குறிப்பிட்ட கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் கல்வியின் தரம் குறைந்து கல்வி துறை மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். எனவே கோத்தாபய ராஜபக்சவின் கல்வி கொள்கை புத்திஜீவிகளால் தயாரிக்கப்பட்டதாக கூறமுடியாது. கல்வி துறையில் அறிவு படைத்தோர் இவரது கொள்கை பிரகடணத்தை தயாரித்து இருக்க முடியாது. இது மிகவும் பாரதூரமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி துறையை கட்டியெழுப்பவும் தரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா? அல்லது முன்னேற்றம் அடைவதா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுனவின ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் கல்வி துறை தொடர்பான விடயங்கள் தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. இந்த கொள்கை பிரகடணத்தில் கல்வி துறை தொடர்பான திட்டங்களை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு சிறந்த புத்திஜீவிகளும்;; கொள்கை பிரகடணத்தில் நாட்டின் கல்வி துறை பின்னோக்கி கொண்டு யோசனைகளை உள்ளடக்கி இருக்க மாட்டார்கள். இந்த கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி துறைசார்ந்த திட்டங்களின்; பாரதூரத்தை கல்வி தொடர்பான சாதாரண அறிவு உள்ளவர்களும் அறிந்து கொள்வர்.
வெட்டுப்புள்ளி முறைமை ஒழிப்பு
கோத்தாபயவின் கல்வி கொள்கையில் வெட்டுபுள்ளி முறைமையை ஒழிக்க திட்டமிட்டுள்ளனர். வெட்டுபுள்ளி முறைமையை ஒழித்து வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க போவதாக அவரது கொள்கை பிரகடணத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு செய்ய முடியாது. கோத்தாபய திட்டத்தை அமுல்ப்படுத்துவதா? அல்லது அதற்கு பதிலாக தற்போதைய எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளதை போன்று வசதி குறைந்த பாடசாலையை சிறந்த பாடசாலையாக தரமுயர்த்துவதனை கொண்டு இதனை செய்வதா? என்பதனையே நாம் ஆராய வேண்டும்;. அதற்காகவே அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனை கொண்டு வசதிகுறைந்த பாடசாலைகளை இல்லாமல் செய்து அனைத்து பாடசாலையையும் சிறந்த வசதிகளுடன் கூடிய பாடசாலையாக மாற்றுவதே எமது திட்டமாகும். எதிரணியினருக்கு வசதிகுறைந்த பாடசாலைகளை அதே நிலைமையில் வைத்து கொண்டு செயற்படவே பார்கின்றனர். எனினும் நாம் நான்காண்டு ஆட்சியில் அனைத்து பாடசாலைகளையும் சம நிலையில் நோக்கி சமமான முறையில் பௌதீக மற்றும் மனித வளங்களை வழங்கியுள்ளோம். அதனை தொடர்ந்தும் செய்வோம். அதன்ஊடாக வசதி குறைந்த பாடசாலை முறைமையை நீக்க முடியும்.
வெட்டு புள்ளி முறைமையானது ஒரு சிறந்த முறைமையாகும். அதனை அப்போதைய கல்வியியல் துறைசார்ந்த அறிஞர்கள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்தே குறித்த முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் கோத்தாபய ராஜபக்ச வெற்றிப்பெற மாட்டார். அதனால் நாட்டின் கல்வி துறை தப்பித்துக்கொண்டது. இல்லையேல் நாம் இதுவரைக் காலம் கட்டியெழுப்பிய கல்வி துறை அதள பாதாளத்திற்கு சென்று விடும். வெட்டுப்புள்ளி முறைமையை இல்லாமல் செய்தால் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அரசியல் வாதிகளின் அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இது பாராதூரமானதாகும்.
கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகமாக மாற்றும் திட்டம்
அத்துடன் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதாக கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வியியற் கல்லூரிகள் என்பது ஆசிரியர்களை பயிற்றுவித்து பயிற்சிப்பெற்ற ஆசிரியர்களை கல்வி கட்டமைப்பில் இணைத்துக்கொள்வதற்கே கல்வியியற் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது நாம் கல்வியியற் கல்லூரிகளில் இளநிலை பட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும் கல்வியியற் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்றுவதன் ஊடாக உரிய பயனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது. பல்கலைகழகங்கள் நிறுவுவது நல்லது. எனினும் ஒவ்வொரு துறைகளுக்கும் ஆசிரியர்களை பயிற்றுவித்து அந்தந்த துறைகளில் தேர்ச்சிப்பெற்றோரை ஆசிரியர்களாக நேரடியாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளவே கல்வியியற் கல்லூரிகள் இயங்குகின்றன. அதனை பல்கலைகழகமாக மாற்றுவதன் ஊடாக எதிர்பார்க்கும் பயனை பெற்றுக்கொள்ள முடியாது.
ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளல்
ஆசிரியர் உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படும் கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் நாட்டின் கல்வி துறை மோசமான நிலைமைக்கு தள்ளப்படும். இறைவனே நாட்டின் கல்வியை பாதுகாக்க வேண்டும். நான்காண்டில் கல்வியை தரமானதாக மாற்றியுள்ளோம். கல்வி தரத்தை பாதுகாக்க அரசியல் வாதிகளின் தூண்டுதல்களை இல்லாமல் செய்து தரமான ஆசிரியர்களை பரீட்சைகள் வாயிலாக இணைத்துக் கொண்டோம். வடக்கு கிழக்கில் போதியளவிலான தகைமையுடைய ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள முடியாதமையினால் ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொண்டோம். அதனை விடுத்து எந்தவொரு ஆசிரியர் உதவியாளர்களையும் நாம் இணைத்துக்கொள்ளவில்லை. முன்னைய ஆட்சி காலத்தின் போதே ஆசிரியர் உதவியாளர்களை இணைத்து கல்வி துறையை நாசம் செய்தனர். தகைமைகளை பார்க்காமலே இதனை செய்தனர். எனினும் எமது ஆட்சியில் 6000 அதிபர்களை இணைத்துக்கொண்டோம். அதில் தகைமையுடையோர்களையே பரீட்சைகளின் வாயிலாக இணைத்து பயிற்சிகளையும் வழங்கி தற்போது கட்டமைப்புக்கு விடுவித்துள்ளோம்;. மேலும் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போதும் அதனையே செய்தோம்.
எனவே கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து கொள்கை பிரகடணத்தில் கூறியதனை போன்று செயற்பட்டால் நாட்டின் கல்வி துறை பாரதூரமான நிலைமைக்கு தள்ளப்படும். இந்த கொள்கை பிரகடணத்தை கல்வியியலாளர்கள் தயாரிக்கவில்லை. கல்வி துறை சார் அறிஞர்கள் அருகிலும் இருந்திருக்கமாட்டார்கள். கல்வி துறை சார்ந்த போதிய அறிவு அற்றவர்களே இந்த கொள்கை பிரகடணத்தை தயாரித்துள்ளனர். தகைமை இல்லாத ஆசிரியர்களை இணைத்துக்கொண்டால் நாட்டின் கல்வி துறையின் தரம் இல்லாமல் போய்விடும். கல்வி துறையை கட்டியெழுப்பவும் தரத்தை அதிகரிக்கவும் நாம் பூரண நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிரணியை ஆட்சிக்கு கொண்டு வந்து மீண்டும் பழைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்வதா? அல்லது முன்னேற்றம் அடைவதா? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். எமது ஆட்சியில் கல்வி துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதனை கட்சி, பேதங்கள் பாராமல் அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
சுரக்சா காப்புறுதி திட்டம், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு மாணவர்களின் கல்வியை தரமாக்கியுள்ளோம். எனவே நான்காண்டில் நாம் முன்னெடுத்த கல்வி துறையில் செயற்பாடுகள் எதிரணியினருக்கு சவாலாக அமைந்துள்ளது. அதனால்தான் அவர்களது விளம்பரங்களிலும் ஏனைய பிரசாரங்களிலும் கல்வி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். எனவே நாம் கல்வி துறைக்கு செய்த காரியங்களை மக்கள் நன்கு அறிவர் என்றார்.