யார் என்ன கூறினாலும் அனைத்து இனங்களையும் பாதுகாக்கும் வகையிலும் எமது அரசாங்கம் செயற்படும்
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
தமிழ் மக்கள் அதிகமாக செறிந்து வாழும் பகுதிகளில் பாடசாலை பற்றாகுறை இருப்பதனால் கொழும்பு மற்றும் வத்தளை நகரங்களில் புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அத்துடன் யார் என்ன கூறினாலும் அனைத்து இனத்தவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது அரசாங்கம் செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வத்தளை ,ஹுனுப்பிட்டி அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தை கல்வி அமைச்சுக்கு அன்பளிப்பு செய்தல் மற்றும் நான்கு மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வுக்கு தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பில் தமிழ் மொழியில் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கும் பாடசாலை தொடர்பாக பெரும் பெரும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் ஆகையால் புதிதாக தேசிய பாடசாலைகள் உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சு பொறுப்பை தன்னிடம் வழங்கிய பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் தெரிவித்தார்
இதன்படி தற்போது கொழும்பு தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகளை புதிதாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று வத்தளையிலும் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை பதிலாக இன்னுமொரு தேசிய பாடசாலையொன்றை நிர்மாணிக்கவுள்ளோம்.
அத்துடன் வடக்கு கிழக்கு ,தெற்கு பேதங்களின்றி பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி துறை அபிவிருத்திக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யார் என்ன கூறினாலும் அனைத்து இனத்தவர்களுக்கும் மதிப்பளித்தும் பாதுகாத்தும் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றார்.