பிந்திய செய்திகள்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை விரைவில் தீர்ப்போம்''

 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதமாக அதிகரித்ததை போன்று , நிதி அமைச்சின் ஆதரவுடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் கிரிஉல்ல,ஹென்டியகல ரத்னபால மஹா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் , விஞ்ஞான ஆய்வுக்கூடம் மற்றும் தொழில்நுட்ப கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் அதிகரித்த விதம் தொடர்பில் அண்மையில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டோம். நாம் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதமாக அதிகரித்துள்ளோம். முதலாம் வகுப்பு ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 21,750 ரூபாவாகவே காணப்பட்டது. எனினும் தற்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரம் கொடுப்பனவுகளுடன் 81,950 ரூபா வரை முழு சம்பளமாக பெறமுடியும்.  அதிபர்களின் சம்பளத்தையும் அதேபோன்று அதிகரித்துள்ளோம். 

அரச ஆசிரியர்களின் ஒய்வூதியம் 2800 ரூபாவில் இருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளோம். 1000,2000 ரூபாவுக்காக போராட்டம் நடத்தியோருக்கு தற்போது எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது .மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மனசாட்சியை தொட்டுபார்த்தால் குறித்த வேலைநிறுத்தம் அநியாயம் என்றே உணர்ந்துக்கொள்வர் என்றார்.

அத்துடன் இந்த நிகழ்வினை அடுத்து கிரிஉல்ல நாபொகுன ஆரம்ப பாடசாலை, கிரிஉல்ல கோனுஉல்ல வித்தியாதீப்தி ஆரம்ப பாடசாலை மற்றும் கிரிஉல்ல ஜயசிறி ஆரம்ப பாடசாலைகளில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மாணவர்களிடம் இன்றைய தினம் (19) கையளித்தார்.

Search