கல்வி அமைச்சரினால் அனைத்து கலாநிதி, பேராசிரியர்களுக்கும் அழைப்பு
-
சட்டத்துறை பாடம் பாடசாலை பாடத்திட்டத்தினுள் உள்வாங்கு
வதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு
நாட்டின் கல்வி கட்டமைப்பின் அபிவிருத்திக்காக புத்திஜீவிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகள் அனைத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையை கல்வியின் ஊடாக முன்னேற்றுவதற்காக புதிதாகவும் மாற்றத்துடனும் சிந்திப்போர் பலர் உள்ளனர். எனவே மாற்றங்களுடனான புதிய ஆலோசனைகளை எனக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தேசிய நூலக மற்றும் ஆவண சேவை சபையின் புத்சரண நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(30) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பழைய நூல்களை நாம் ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும். அதேபோன்று சிங்கள மொழியிலான பழைய நூல்களை தமிழிலும் தமிழ் மொழி நூல்களை சிங்களத்திலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
அத்துடன் பாடசாலை பாடத்திட்டத்திற்கு சட்டத்துறை பாடத்தை உட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்திற்காக செலவினை கருத்திற்கொள்ளாது செய்ய முடியுமான அனைத்து மாற்றங்களை கல்வி கட்டமைப்பில் நான் முன்னெடுக்க அர்ப்பனிப்புடன் செயற்படுவேன். மேலும் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை நூலகங்களுக்கு தேவையான நூல்களை விலைக்கு வாங்குவதற்காக 700 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன். இதன்படி அதிகளவில் நூல் வாசிக்கும் மாணவர்கள் 1000 பேர் இவ்வாண்டும் கௌரவிக்கப்படுவர் என்றார்.