பாடசாலைகளில் 1 முதல் 11 வகுப்பு வரை கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் விருப்பமான பாடமாக ஆக்குவதற்கும் செயற்திறன் மட்டத்தை அதிகரிக்கவும் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சின் கணித பாடத்துறைக்கான கிளை விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
கணித கருத்திட்டத்தை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி மாணவர்கள் இலகுவாக புரிந்துக்கொள்ளும் விதமாக செயற்பாடுகள் ஊடாக புரிந்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்குவதே குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக படைப்பாற்றல், முரண்பாடுகளை தீர்க்கும் திறமை, தொடர்பாடல் திறன், பகுத்தறிவு சிந்தனை போன்ற திறமைகள் வளர்க்கப்படும். இந்த வேலைத்திட்டத்தில் ஆரம்ப கல்வி, இடைநிலை வகுப்புகள் மாணவர்கள் உள்வாங்கப்படும் வகையில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான கற்றல் வள உபகரணங்கள், செயற்பாட்டு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக 150 பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கணித பாடத்தின் செயற்திறன் நிலையை கட்டியெழுப்புவதற்கு குறுகிய காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக 2015 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி பெற்றோரின் வீதம் 55 ஆக இருந்ததுடன் 2016 இல் 63 வீதமாகவும் 2017 இல் 67 வீதமாகவும் 2018 இல் 68 வீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. கணித பாடத்தின் செயற்திறன் நிலையை வளர்க்க இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகின்றன.