ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் , பொதுச்செயலாளர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தரவில்லை என்றும் கட்சிக்குள் பிளவு இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப பார்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனினும் வேட்புமனு தாக்கலின் போது கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட குறிப்பிட்ட சில தரப்பினருக்கே வருகை தர முடியும். இதன்படி சஜித் பிரேமதாச புதிய ஜனநாயகக் கட்சியிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுகின்றார். எனினும் குறித்த கூட்டணி கட்சியின் பொதுச்செயலாளர் வேட்பு மனு தாக்கலின் போது பங்குபற்றியிருந்தார். இதுவே சரியான வழிமுறையாகும். எனினும் வேட்புதாக்கலின் போதான நடைமுறைகள் தொடர்பில் கூடி புரிந்துணர்வற்றவர்களாக ராஜபக்ஷவினர் உள்ளனர். எனவே இவ்வாறான புரிந்துணர்வற்ற அரசியல் வெட்க கேடானது என்றார்.