அனர்த்தம் மற்றும் சொத்து இழப்புகளை குறைப்பதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமை குறித்து அமைச்சர் அதிருப்தி.
அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கும், சேதத்திற்குள்ளான பாடசாலைகளின் நிலைமைகளை கண்டறிவதற்காகவும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கடந்த 4 ம் திகதி தென் மாகாணத்தின் சில பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அக்குரஸ்ஸ, மொரவக்க, தெனியாய, கொட்டபொல, பிட்டபெத்த, பாஹியங்கல போன்ற பிரதேசங்களுக்குச் சென்ற அமைச்சர் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமையினால் பாதிப்புக்குள்ளான மாத்தரை, துடகலஹேன கனிஸ்ட வித்தியாலயம், பிட்பெத்தர டட்லி சேனாநாயக்க வித்தியாலயம், தெனியாய மத்திய மகா வித்தியாலயம், மொரவக்க மத்திய மகா வித்தியாலயத்துடன் மேலும் சில பாடசாலைகளையும் அமைச்சர் கண்காணித்துச் சென்றார்.
அனர்த்தம் மற்றும் சொத்து இழப்புகளை குறைப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயல்படவேண்டியது அவசியமாகும், அத்துடன் பரிசோதனைக்குட்படாத கட்டிடங்கள் அந்தந்த நேரங்களில் எடுக்கப்படாத சரியான நடவடிக்கைகள் போன்றவைகளே காரணங்களாகும். அத்துடன் இவ்வாறான அனர்த்தங்களை கட்டுப்படுத்த வேண்டிய தருணத்தை தவிர்த்ததால் ஏற்பட்ட இழப்புகளை அந்தந்த பாடசாலைகளில் தெளிவாகக் காணக்கூடியதாகவுள்ளதுடன் சரியானமுறையில் செயல்படாத உத்தியோகத்தர்கள் குறித்து தமது அதிருப்தியை அமைச்சர் தெரிவித்தார்.
விசேடமாக வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதற்கமைய கணணி ஆய்வுக்கூடம், புத்தகசாலை, காணொலிப் பிரிவு ஆகியவற்றை கீழ்த் தளத்தில் நிறுவுவதை தவிர்ப்பதுடன் மேல் மாடியில் அமைப்பதோடு இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய மாடிக்கட்டிடம் நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தியோகத்தர்களுக்கு எடுத்துக்கூறினார்.
மேலும் பாதிப்புக்குள்ளான கணணி ஆய்வுக்கூடம், காணொலி உபகரணங்களுடன் ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தியோகத்தர்களுக்குப் பணிப்புரை விடுத்தார்.
ஒவ்வொரு பாடசாலைகளின் பிராந்திய அமைப்பு, புவியியல், சூழல், பாடசாலைக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இயற்கையான தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு பாடசாலைக்கு தேவையான பிரதான திட்டமொன்றை தயாரிக்குமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை சில பாடசாலை பொறுப்பாளர்கள் புறக்கணித்ததன் விளைவே இவ்வாறான அனர்த்த நேரங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளை குறைக்கமுடியாதுள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இக்கண்காணிப்பின்போது அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் முக்கிய தேவைகளைத் தவிர ஏனைய தேவைகளைச் சிலர் பூர்த்தி செய்துவருவதாக அமைச்சர் விமர்சித்ததுடன், ஏற்றுக்கொண்ட தீர்மானங்களுக்கமைய செயல்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் பாடசாலையின் முக்கிய தேவையினை தேர்ந்தெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.