கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிப்புக்குள்ளான சுமார் இருபத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களின் பாடசாலை கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய பொதியினை வழங்குவதற்கு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதற்கென தேசிய பாடசாலைகள் மற்றும் சில வியாபார நிறுவனங்கள் இணைந்துள்ளன.
தேசிய பாடசாலைகள் மற்றும் சில வியாபார நிறுவனங்கள் இணைந்து சேகரித்த உதவிப் பொருட்களை கல்வி அமைச்சில் 7 -ம் திகதி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் கையளிக்கப்பட்டபோது இத்தகைய பங்களிப்புச் செய்த பாடசாலை மாணவர்கள் அனைவரையும் அமைச்சர் அவர்கள் பெருமையுடன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்.
எட்டு மாவட்டங்களில் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலை மாணவர்களுக்கான இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கல்வி அமைச்சர் விடுத்த அறிவுறுத்தலுக்கமைய அனைத்து தேசிய பாடசாலைகளும் அனர்த்தத்திற்குள்ளான பாடசாலை மாணவர்களுக்கான பணத்தினை தவிர ஏனைய அவசியமான உதவிப் பொருட்களைச் சேகரிக்கும் மத்திய நிலையமாக செயல்படுத்தப்பட்டது.
பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கென கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் உதவிப்பொதியில் ரூபாய் 10000 பெறுமதியான பொருட்கள் உள்ளடங்குகின்றன. இதில் சீருடைத்துணி 3 தொகுதி, சப்பாத்து வவுச்சர், பாடப்புத்தகங்கள் மற்றும் கொப்பிகள் அடங்குகின்றன. மேலும் தேசிய பாடசாலைகள் மற்றும் சில வியாபார நிறுவனங்கள் இணைந்து சேகரித்த உதவிப் பொருட்களும் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியினை வழங்குவதற்கு உண்மையில் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்களை தவறில்லாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப் படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அதற்காக பாடசாலை மாணவர்கள் பற்றிய விபரங்களை வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் கைவசம் வைத்திருத்தல் அவசியமென கல்வி அமைச்சர் தெரிவித்தார். சரியான தகவல்களை உறுதிப்படுத்திபின் இனிவரும் வாரங்களில் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்களுக்கு பொதியினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உதவிப் பொருட்களை வழங்கிய வியாபார நிறுவனங்களுக்கும் தேசிய பாடசாலை மட்டத்தில் சேகரிக்கும் நடவடிக்கையினை ஒருங்கிணைத்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தமது நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆரச்சி அவர்கள், கல்வி இராஜாங்கச் செயலாளர் திரு. திஸ்ச ஹேவாவிதான அவர்கள், மேலதிகச் செயலாளர் (பாடசாலை நடவடிக்கை) திரு. அசோக்க ஹேவகே அவர்களுடன் முக்கியஸ்தர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலரும் உதவி புரிந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.