சம்புத்த சாஸனம் மற்றும் இந்நாட்டில் பௌத்த பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ருவன் வெலிசாய போதிக்கு முன்னிலையில் சத்தியம் செய்தார். ருவன் வெலிசாய விகாராதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரரின் உபதேசத்தின்படி கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவுரையின்படி மத்திய கலாச்சார நிதியத்தின் ஊடாக 23 மில்லியன் ரூபாய் செலவில் ருவன் வெலிசாய போதி பாதுகாப்பு பணி செய்துமுடிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் பௌத்தப் புராதன காணி பிரதேசங்களின் எல்லைகளை உறுதிபடுத்தும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி கூரகல ஆதி புராதன இடம் விரைவில் பாதுகாக்கப்படுவதற்கு தாம் தலையிடப்போவதாக கூறிய அமைச்சர் இதனால் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றார். சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தினூடாக மத்திய கலாச்சார நிதியத்திற்கு கிடைத்த வருமானத்தில் நாடு முழுவதிலும் இதுபோன்று விகாரை பாதுகாப்புக்கென இவ்வாண்டு 400 மில்லியன் ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 100 மில்லியன் ரூபாய் தொலைதூர விகாரை பாதுகாப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பூஜையில் அமைச்சர்களான கௌரவ பி. ஹரிசன் அவர்கள், கௌரவ சந்திராணி பண்டார அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.