உலக இளம் பௌத்த சங்க சபையின் 14 வது சம்மேளனம் இம்முறை இலங்கையில் நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் நடவடிக்கைக் குழுவின் தலைவர் பதவியை வகிப்பதுடன், இன்று (19) ம் திகதி அபே கம வளாகத்தில் சம்மேளனம் ஒருங்கமைப்பு குறித்து விசேட கலந்துரையாடல் அமைச்சர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஒக்டோபர் மாதம் 27 ம் திகதி முதல் 30 ம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கண்டி பல்லேகலை மாகாண சபை மாநாட்டு மண்டபம் மற்றும் கலேவெல மில்லவான மகா வித்தியாலயம் போன்ற இடங்களில் இச்சம்மேளனம் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலக முழுவதிலுமுள்ள தேரவாத, மகாயான, தந்திரயான, வஜ்ரயான மற்றும் சென் பௌத்த இளம் புத்த பிக்குகள் சுமார் ஆயிரம் பேர்கள் பங்கேற்கும் மேற்படி சம்மேளனம் இலங்கையில் இரண்டாம் தடவையாக நடைபெறவுள்ளது. 2004 ம் ஆண்டு நேபாளில் நடைப்பெற்ற முதலாவது சம்மேளனத்திற்குப் பிறகு மலேசியா, தாய்லாந்து, ஆவுஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மன், சுவிஸ்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க இராஜ்சியம் போன்ற நாடுகளில் மேற்படி சம்மேளனம் நடைப்பெற்றுள்ளது.
மேற்படி சம்மேளனத்தினூடாக விகாரை அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் பௌத்த நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு சம்மேளனத்தில் பங்குபெறும் இளம் புத்த பிக்குகளின் ஊடாக அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை நகரங்களில் நடைப்பெற்ற மேற்படி சம்மேளனம் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின்படி இம்முறை கிராம பகுதிகளுக்கு அருகாமையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது விசேடமானதாகும். அதற்கமைய நிறைவு விழா கலேவெல மில்லவான மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையினால் மில்வான வித்தியாலயத்தினை அனைத்து வசதிகளுடன் கூடிய அபிவிருத்தியினை செய்வதற்கு அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இக்கலந்துரையாடலில் உலக இளம் பௌத்த சங்க சபையின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய முகுனுவெல அனுருத்த தேரர், உலக இளம் பௌத்த சங்க சபையின் தேசிய சபையின் உப தலைவர் வணக்கத்திற்குரிய திசாகடுவே சோமானந்த தேரர், உலக இளம் பௌத்த சங்க சபையின் தேசிய சபை செயலாளர் வணக்கத்திற்குரிய மெனிக்ஹின்னே திரானந்த தேரர் உடன் உலக இளம் பௌத்த சங்க சபையின் மாவட்ட அமைப்பாளர்களான புத்த பிக்குகள் பலரும் கலந்துகொண்டனர்.