பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒரு மாணவன் வாசிப்பதற்கென குறைந்தது 10 புத்தகங்களாவது இருக்கவேண்டும் என்பது சர்வதேச தேர்வுமுறை. அதற்கமைவாக எதிர்வரும் 5 வருடங்களுக்குள்ளாக பாடசாலைகளில் நூலக பாவனையை 50% வீதத்தால் உயர்த்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். ஒவ்வொரு கட்டமாக “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் 3200 பாடசாலைகளுக்கு நூலக புத்தகங்கள் பெற்றுக்கொடுப்பதற்கென 700 மில்லியன் ரூபாய் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாடசாலை நூலகங்களுக்கு பெறப்படும் அனைத்து புத்தகங்களும் கல்வி புத்தக வெளியீட்டாளர் சபையின் அனுமதியினை பெறவேண்டுமென்பதோடு, ஏதேனும் வெளியீட்டாளர்கள் அல்லது பதிப்பக ஆசிரியர்கள் பாடசாலை நூலகம் சம்பந்தமான புத்தகங்களை வழங்குவதற்கு விரும்பினால், தாமதிக்காமல் தமது பதிப்புகளை கல்வி புத்தக வெளியீட்டாளர் சபைக்கு முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். விரைவில் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான ஒழுங்குமுறை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன் கௌரவ கல்வி அமைச்சரின் பணிப்புரையின்படி அரச சாஹித்ய விருதுகள் வென்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களுக்கு இவ்வனுமதிப்பத்திரம் தேவையில்லை.
“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கமைய பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்ந்தெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் மற்றும் கருத்தில் கொள்ளவேண்டிய தேர்வுமுறையினை அதிபர்களுக்கு அறிவுறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு பாடசாலைகளுக்கு அருகிலுள்ள புத்தகசாலைகளில் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.