சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை செல்லவேண்டிய வயதில் பாடசாலைச் செல்லாத பிள்ளைகள் தொடர்பாக ஏராளமான வேலைத்திட்டம்.
விசேட கல்வி ஆசிரியர்கள் 831 பேர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை.
உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான வளங்கள் மற்றும் தகவல் மத்தியநிலையம்.
அனைத்து விசேட கல்வி அலகுகளையும் உள்ளடக்கி வளங்கள் நிறைந்த மத்திய நிலையமாக மேம்படுத்தல்.
நாட்டிற்கு பொருளாதாரச் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு 100% எழுத்தறிவு மட்டத்தினை இலங்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், அதற்காக எத்தகைய காரணமாக இருப்பினும் பாடசாலைச் செல்லாத பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கான ஒழுங்கான வேலைத்திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார். சர்வதேச எழுத்தறிவு தினமாக செப்டெம்பர் 08 ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு கல்வி அமைச்சில் மேற்கொள்ளவிருக்கும் செயற்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று 30 ம் திகதி காலையில் நடைப்பெற்றபோது மேற்படி கருத்தினை கல்வி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொழில் திணைக்களத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தில் “குழந்தை செயல்பாடு ஆய்வு” என்ற பெயரில் ஆய்வு செய்யப்பட்டு 2017 பெப்ரவரி மாதம் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2016 ம் ஆண்டில் 5 – 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4.6 மில்லியன் என்பதுடன் அக்கால கட்டத்தில் பாடசாலை செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 452,661 ஆகும். இவ்விடயம் தொடர்பாக சில ஊடகங்கள் தவறான அறிக்கைகள் வெளியிட்டன என அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.