கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் அவர்களின் வழிக்காட்டலில் இலங்கையிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளை கட்டியெழுப்பவும் அவற்றின் நிலைமைகள் விரைவில் மேம்படவும் கல்வி அமைச்சின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாடுமுழுவதும் மத்திய, மேல், ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய 5 மாகாணங்களிலும் அபிவிருத்தி தேவைக்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப்பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது நடைபெற்றுவருகின்றது. பாடசாலை கட்டிடம் நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல், ஆசிரியர் மனை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல், ஆய்வுகூடங்கள் மற்றும் கணணி ஆய்வுகூடங்கள் நிர்மாணித்தல் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றது. மேலும் இப்பாடசாலைகளின் வகுப்பறை மற்றும் அலுவலகங்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட 32 தோட்டப்பாடசாலைகளுக்கு மடிக்கணணி மற்றும் அச்சு இயந்திரம் (பிரின்டர்) போன்றவை கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மற்றும் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் அவர்களினால் கையளிக்கப்பட்டது.
விசேடமாக தோட்டப்புற பாடசாலைகளின் அதிபர்களின் முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ திறமைகளை மேம்படுத்தி ஆசிரியர்களின் கற்பித்தல் வழிமுறைகளை அபிவிருத்தியடையச் செய்வதுடன் பாடசாலை மாணவர்களின் செயல்திறன் முன்னேற்றமடையவும் தோட்டப்பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய தோட்டப்பாடசாலைகளின் மாணவர்களின் செயல்திறன் மேன்மையடைய விஞ்ஞான மற்றும் கணித பாடங்களின் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் விருத்தி செய்தலுக்கான பல பயிற்சிப்பட்டறைகள் கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அதிபர்களுக்கும் முகாமைத்துவ மற்றும் தலைமைத்துவ திறமைகளை மேம்படுத்தும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.