“சாதாரண தர பரீட்சையின் அனைத்துப் பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், விடைத் தாள் ஆய்வாளர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்”
– கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்
அரசாங்கம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களை குறைந்தது இரண்டு வருடங்களாவது பாவிப்பதற்கு மாணவர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக எடுத்த தீர்மானம் நல்ல நோக்கத்துடன் மேற்கொண்ட தீர்மானம் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார். கடந்த 11ம் திகதி கொழும்பு டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைப்பெற்ற 2018 ம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் தேசிய விழாவில் கலந்துகொண்டு மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
மேலும் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு மக்களின் வரிப்பணம் பாவிக்கப்படுவதால் ஏற்படும் அதிக செலவினைக் கட்டுப்படுத்தி, மக்களின் சுமையைக் குறைத்து, அப்பணத்தினை வேறு நடவடிக்கைகளுக்கு உபயோகிக்கும் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சாதாரண தர பரீட்சைக்கான கால அளவினை குறைத்து சாதாரண தர பரீட்சை நடவடிக்கையினால் புதிய வருடத்தில் ஆரம்பிக்கும் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கான அனைத்துப் பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு விடைத் தாள் ஆய்வாளர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இவ்விழாவில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆரச்சி, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. அய்.எம்.கே.பி. இலங்கசிங்க மற்றும் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மற்றும் அதிகாரிகளும் சில பாடசாலைகளை பிரதிநிதிப்படுத்தி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.