2018 ம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் ஆண்டிற்கு சேர்க்கப்படும் பிள்ளைகள் தமது 13 வருடத்தினை பாடசாலை கல்வியில் நிறைவு செய்து 2030 ல் பாடசாலையை விட்டு வெளியேறும்போது அவர்களின் முன்னேற்றத்திற்கு உயர் கல்வியும், தொழில் வாய்ப்பும் இன்றைய நாளைவிட மிகவும் மாற்றமடைந்திருப்பதோடு, அந்த நிலைமைக்கு எதிராக சிறந்ததொரு கவனத்தைச் செலுத்தி நன்கு ஆராய்ந்து நாட்டின் கல்வி திட்டத்திற்கு ஏற்ப தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு, இசிபத்தான வித்தியாலயத்தில் 15ம் திகதி நடைப்பெற்ற 2018 ம் ஆண்டில் முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான தேசிய விழாவில் கலந்துகொண்டு மேற்படி கருத்தினை தெரிவித்தார்.
அறிவினை அடிப்படையாகக்கொண்ட சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய கல்வித் துறையில் இனங்காணப்பட்ட சிறந்த செயற்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார். எதிர்காலத்தில் எந்தவொரு பிள்ளையும் சாதாரண தரத்தில் பாடசாலை கல்வியை இடையில் நிறுத்தமாட்டார்கள் எனவும், கல்வி அமைச்சின் தலைமையில் செயற்படுத்தப்பட்டுள்ள 13 ஆண்டு சான்றிதழுடன் கூடிய கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் பிள்ளைகளின் திறமைக்கேற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்து உயர்தர கல்வியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
உயர் தரத்திற்காக புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்பாடத்தில் நடைமுறை மற்றும் நவீன வேலை உலகத்திற்கு ஏற்ற புதியதாக 26 பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இவ்வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ளல் மற்றும் பயிற்சி அளித்தல் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் முதலாம் வருட பிள்ளைகளின் ஆங்கில கல்வியை கட்டியெழுப்பவும் விசேடமாக கிராமப்புற பாடசாலைகளில் பிள்ளைகளின் முதல் ஆங்கில திறமையை கட்டியெழுப்புவதற்காகவும் ஆண்டு 1, 2 ற்கான ஆங்கில பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
புதிதாக பாடசாலை கல்வியை ஆரம்பிக்கும் சிறிய பிள்ளைகளின் மனதினை அபிவிருத்தி செய்து அவதானத்துடன் பிழையில்லாமல் கல்வியை பெற்றுக்கொடுப்பதில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களின் சிறப்பான பங்கு உள்ளதென தெரிவித்த அமைச்சர், இவ்வருடம் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிற்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள 340000 ற்கு அதிகமான அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.