அரச ஊழியர்கள் 15 இலட்சம் பேர்களின் அடிப்படை சம்பளத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றும் போது,
2015 ஆம் ஆண்டு 11,730 ரூபாவாக இருந்த சாதாரண அலுவலக உதவியாளர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தை தற்போது 24,250 ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் சாரதியொருவரின் அடிப்படை சம்பளம் 2015 ஆம் ஆண்டு 12,430 ரூபாவாக இருந்ததுடன் தற்போது 25,790 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ உதவியாளர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 2015 இல் 13,990 ஆக இருந்ததுடன் அந்த தொகை தற்போது 28,940 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16,120 ரூபாவாக இருந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவரின்; அடிப்படை சம்பளத்தை 33,330 ரூபாவாக அதிகரித்துள்ளளோம். இது போன்று அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளோம். எரிபொருட்களின் விலைகள் மற்றும் சமையல் எரிவாயுவொன்றின் விலையும் 2014 ஆம் ஆண்டு இருந்ததை விட குறைவாகவே இன்னும் உள்ளது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.