பிந்திய செய்திகள்

கல்வி துறையில் இதுவரை செய்யாத பாரிய புரட்சி செய்துள்ளோம்.

பாராளுமன்றத்தில்; கல்வி அமைச்சின் மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு

கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் ஊடாக விஞ்ஞான ஆய்வு கூடம், தொழில்நுட்ப கூடம், இரண்டு மற்றும் மூன்று வகுப்பறை கட்டடங்கள், மலசல கூடங்கள் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் கிராமிய பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய முயற்சியாகும்.

வடக்கு,கிழக்கு மற்றும் மலையக ஆகிய பகுதிகளில் வசதி குறைந்த பாடசாலைகளை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். இதுவரை கல்வி துறையில் செய்யாத மாற்றங்களை செய்து வருகின்றோம்.

அத்துடன் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடளாவிய அனைத்து பாடசாலைகளிலும் 35ஆயிரத்துக்கும் அதிகமான மலசல கூடங்களை நிர்மாணித்துள்ளோம். மேலும் குடிநீர் வசதிகளையும் பெரும்பாலான பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்த போது 60 சதவீதமே நாடளாவிய அனைத்து பாடசாலைகளிலும் மின்சார வசதி இருந்தது. எனினும் தற்போது 98 வீதமான பாடசாலைகளுக்கு மின்சார வசதி உள்ளது.

மேலும் ஒரு சில பாடசாலைகளில் மேசை, கதிரை பற்றாகுறை இருப்பதாக விவாதத்தின் போது பலரும் குற்றம் சுமத்தினர். எனினும் மேசை,கதிரை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் இந்த பிரச்சினையை எம்மால் மாத்திரம் தீர்க்க முடியாது. மாகாண சபைகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரச்சினை உள்ளது. இது இன்று நேற்று வந்த பிரச்சினை இல்லை. முரண்பாடு தொடர்பில் தொழிற்சங்கத்துடன் பேசினேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இது தொடர்பாக அரச துறை ஊழியர்களின் சம்பள கலந்தாய்வு ஆணைக்குழுவுக்கு யோசனைகள் முன்வைத்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானம் எடுக்க வேண்டும். கல்வி அமைச்சினால் எதுவும் செய்ய முடியாது. எனினும் நாம் ஆட்சிக்கு வந்த கையோடு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளோம். அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவை 6000 ரூபாவாக அதிகரித்துள்ளோம். எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அதனை மறந்துள்ளனர். சம்பள முரண்பாடு பிரச்சினையை தீர்க்க நாம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்காக போராட்டம் நடத்தி அமைச்சின் வாயிலை உடைத்து கொண்டு வரப்பார்த்தனர். நாம் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இல்லை. நான் பல முயற்சியுடன் கல்வி துறையின் வளர்ச்சிக்கு பாடுப்படுகின்றேன்;.

வடக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தொண்டர் ஆசிரியர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இணைத்துக்கொண்டோம். நாம் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பும் போது எந்தவொரு அரசியல் தலையீடுகளும் செய்யவில்லை. அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி கல்வி கட்டமைப்பில் உள்ள வெற்றிடங்களை நிரப்பி வருகின்றோம். நாம் ஆட்சிக்கு வரும் போது 20 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வாக வெற்றிரடங்களை நிரப்பி வருவதுடன், அதற்கு மாற்றமாக முறையான ஆசிரியர் இடமாற்றங்களை செய்து வருகின்றோம். என்றாலும் ஆசிரியர்களின் வெற்றிரடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு கிடைப்பது குறைவாகும். பல்வேறு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு கிடைக்காதமையினால் நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் பயிற்சி இல்லாத ஆசிரியர்களை இணைத்து கொள்ளவில்லை. பயிற்சி வழங்கியே ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு வருகின்றோம். வடக்கில் மாத்திரமே பிரச்சினை இருந்தது. வடக்கில் அதனால் பயிற்சியற்ற ஆசிரியர்களை இணைத்தோம். மேலும் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பூரண பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அத்துடன் தனியார் பாடசாலைகளில் கல்வி தரத்தை கண்காணிப்பதற்கு மேற்பார்வை ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஊடாக கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் முறைமையை கண்காணிக்கவுள்ளோம். மேலும் தற்போது காலத்திற்கு ஏற்றவகையில் தொழில் பிரவேசித்திற்காக 13 வருட தொடர் கல்வி முறைமையை கொண்டு வந்துள்ளோம். இதன்ஊடாக நவீன தொழில் யுகத்துக்கு ஏற்ற பாடத்துறைகளை மாணவர்களுக்கு தெரிவு செய்துக்கொள்ள முடியும். இது கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய புரட்சியாகும். மேலும் 43 இலட்சம் மாணவர்களின் ஆரோக்கிய நலனை கருத்திற்கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். எனவே நாட்டின் கல்வி துறை வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

 

Search