- மே மாதத்தில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படும்
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
தொழில் உலகத்திற்கு ஏற்ற வகையில் தொழில் கல்வியை பெற்றுக்கொடுக்கும் 13 வருட தொடர் கல்வியை பூரணப்படுத்தும் மாணவர்களுக்கு க.பொ.த உயர்தர சான்றிதழையும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் NVQ சான்றிதழையும் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாடசாலை கல்வியின் பின்னர் தொழில் உலகத்திற்கு பிரவேசிக்கும் மாணவர்களுக்கு குறித்த இரு சான்றிதழ்களின் ஊடாக ; எந்தவொரு குறைப்பாடுகளுமின்றி தொழில் உலகத்திற்கு பிரவேசிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான பாடசாலை விளையாட்டு வர்ண விருது உற்சவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு பயிற்சியாளர் 3850 பேருக்கும் மே மாதமளவில் நியமனம் வழங்கி பூரண பயிற்சி அளிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
விளையாட்டு திறமை வெளிப்படுத்தும் மாணவர்கள் 1000 பேருக்கு சுபக புலமை பரிசில் நிதியத்தின் ஊடாக மாதாந்தம் 2500 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவையில் பத்திரமொன்றை முன்வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாடசாலை விளையாட்டு போட்டியின் ஊடாக கிராமிய மற்றும் நகர ரீதியிலுள்ள மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதுடன் விளையாட்டு துறைக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது.
சம ஆரோக்கியத்திற்காக அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டில் பங்குகொள்ள வேண்டும் என 2015 ஆம் ஆண்டு நான் சுற்று நிருபமொன்றை வெளியிட்டேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து விளையாட்டு துறையை மேலும் பலப்படுத்தினால் அது பாடசாலை கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அத்துடன் பாடசாலை அபிவிருத்தி அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். விளையாட்டில் ஈடுப்பட்டுள்ள மாணவர்களின் நலன் கருதி சில சுற்று நிருபத்தை மீறி செயற்பட்டுள்ளோம்.
மேலும் 13 வருட தொடர் கல்வியின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் எந்தவொரு இடையூறும் இன்றி உயர்தரம் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வழங்கும் உயர்தர சான்றிதழ் மாத்திரமின்றி NVQ சான்றிதழையும் மாணவர்களுக்கு வழங்குவோம். இதன்ஊடாக தொழில் உலகத்திற்கு செல்வதற்கு மாணவர்களுக்கு எந்தவொரு தடையும் இருக்காது. மேலும் விளையாட்டின் ஊடாக முன்செல்ல முடியுமாயின் பல்கலைகழகம் மற்றும் உயர்தர நிறுவனங்களுக்கு சென்று வெற்றிகரமாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.