உளவுப் பிரிவு தொடர்பாக கூறப்படும் வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. உளவு பிரிவினை அரசாங்கம் ஒருபோதும் முடக்கவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு நான்கு உளவு பிரிவினரே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர்களின் சடலத்தினை வைத்து கோத்தாபய ராஜபக்ஷ அரசியல் செய்து ஜனாதிபதி வேட்பாளராக முயற்சிக்கும் செயற்பாட்டை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.
பொலிஸ், இராணுவம், விசேட அதிரடி படைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உளவு பிரிவினர் உள்ளனர். எனினும் கடத்தல் மற்றும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பிணை வழங்க முடியாத நான்கு பேர் மாத்திரமே சிறையில் உள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடனும் எக்னலியகொட காணாமல் போன சம்பவத்துடனும் தொடர்புடைய உளவு பிரிவினர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உளவு பிரிவினை அரசியல் மயப்படுத்த வேண்டாம். சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தமையிட்டு நான் பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறுகின்றேன்.
சங்ரிலா ஹோட்டலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது அவரின் பாதுகாப்பு பிரதானியாக செயற்பட்டவராகும். எனினும் அவரால் இந்த தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை.
கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பில்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரின் மீது தாக்குதல் நடத்திய போது உளவுப்பிரிவு அறிக்கை கிடைக்கவில்லையா என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.