உடன் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்களை பெறமுடியும்.
எனவே தேவையான மாணவர்கள் உடன் விண்ணப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.
அலரிமாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தீவிரவாத தாக்குதலின் காரணமாக பல சிறுவர்கள் உயிரிழந்தனர். அதுமாத்திரமின்றி பலர் காயமடைந்தனர். எனவே பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக சுரக்சா காப்புறுதி திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். இதன்படி இவ்வருடத்திற்கான காப்புறுதி பிரதிலாப தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சுரக்சா காப்புறுதியின் பயன்களை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். மாணவர் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் காப்புறுதியின் ஊடாக 2 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ள முடியும். எனவே தேவையுள்ள மாணவர்கள் உடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.