பிந்திய செய்திகள்

பாடசாலை நடவடிக்கைகள் சாதாரண மட்டத்தில் 

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பெரும் ஆதரவு
 
அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறையினர் கூறியதன் பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று (06) இரண்டாம் தவனைக்காக ஆரம்பிக்கப்பட்டது.
 
எனினும் இன்றைய தினம் மாணவர்களின் வரவு குறைந்த மட்டத்தில் இருந்ததாக தெரியவருகின்றது. கொழும்பு நகர பாடசாலைகளின் வரவு பெருமளவில் குறைந்திருந்த போதிலும் கிராமிய பாடசாலைகளின் வரவு அதிகரித்திருந்ததாக கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
அத்துடன் இன்றைய அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களினதும் பாடசாலை ஊழியர்களினதும் வருகை உயர்ந்த மட்டத்தில் இருந்தமை விசேட அம்சமாகும். 
 
ஆனாலும் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆரம்ப பிரிவுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை. எதிர்வரும் 13 ஆம் திகதி 1-5 வரையான வகுப்புகளுக்கான இரண்டாம் தவனைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
கடந்த தினங்களில் ஏற்பட்ட அசாதாரணமான நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் இயல்பு நிலைமைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கும் இந்த தருணத்தில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் போலியான பிரசாரங்களை புறந்தள்ளிவிட்டு தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்புக்காக அர்ப்பனிப்புடன் செயற்படும் பாதுகாப்பு படையினருக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் தமது தொழிற்சங்கங்களில் பிரபலத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் ஒரு சில தொழிற்சங்கங்கள் மக்களை திசைத்திருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் செயலை கல்வி அமைச்சு வண்மையாக கண்டிக்கின்றது.
 
சமூகத்திற்கு மத்தியில் தமது பிரபலத்திற்காக செயற்படும் தொழிற்சங்கங்களை பார்க்கிலும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு துறைக்கும் இருப்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.இவ்வாறான துக்ககரமான சந்தர்ப்பத்தில் வாதங்களை புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் அவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடையூம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்த விரும்புகின்றோம்.
 

Search