பிந்திய செய்திகள்

கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து எனது அரசியல் தோற்றத்தை தகர்ப்பதற்கு ஒரு சிலர் முயற்சி

 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து தனது அரசியல் தோற்றத்தை தகர்ப்பதற்கான முயற்சிகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பிரிவில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி அலுவலகர்கள் 592 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாடசாலை சீருடை துணி வழங்கலில் காணப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளை முற்றாக நீக்கி மாணவர்களின் சீருடையை வைத்து எவரும் மோசடிகளில் ஈடுப்படாமல்; இருப்பதற்காகவே பாடசாலை சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. சீரான ஒழுங்கு முறைமைக்கு அமைவாகவே குறித்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக பல கோடிக்கணக்கான பணத்தை அராசாங்கத்திற்கு சேமிக்க முடிந்தது. 
அதேபோன்று சுரக்சா காப்புறுதி திட்டம் தொடர்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் கல்வி அமைச்சினால் சுரக்சா காப்புறுதி திட்டம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக சுரக்சா திட்டத்தை தனியார் துறைக்கு வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதியி நியமித்த மேன்முறையீட்டு விசாரணை குழுவே எடுத்தது. 
மேலும் பாடபுத்தகங்களில் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமை தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் பாடபுத்தக வாழ்த்துச் செய்தி முறைமை முன்பு இருந்த கல்வி அமைச்சர்களின் காலத்திலும் நிலவியதுடன் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியும் கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களில் உட்சேர்க்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமைக்காக மேலதிக நிதி செலவிடப்படமாட்டாது. 
அதேபோன்று நவீன தொழில்நுட்ப முறைமையை மாணவர்களுக்கு வழங்கும் நோக்குடன் டெப் கணிணி வழங்கும் திட்டத்திற்கும் பல்வேறு இடையூறுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே கல்வி துறையில் முன்னெடுக்கப்படும் மக்கள் நல திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருந்திருந்தால் தற்போதைக்கும் பார்க்க எம்மால் வேகமாக செயற்பட முடிந்திருக்கும். எனவே பின்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் அபிவிருத்தி அடைந்த கல்வி தரத்தை இலங்கையிலும் உள்வாங்க வேண்டும் என்றார்.

Search