-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
சாதாரண தர, உயர்த தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் மாத்திரமின்றி பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச, தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களை கல்வி கட்டமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் 3880 பேரை இணைத்துக் கொள்ளும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்ததாகவும்; மாகாண சபைகள் இந்த நியமனத்திற்கு தடையாக இருந்ததுடன் பலரும் சமூக வலைத்தளங்களை எனக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைத்த போதும் கல்வி அமைச்சின் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சேவை ஆரம்ப பயிற்சி முடித்து விட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் 548 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு குருநாகல் மலியதேவ கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் தமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மத்தியில் சிறந்த புள்ளிகளை பெறுவோரை விரைவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி விசேட பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.