-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போட்டித்தன்மையுடன் கூடிய பரீட்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. அதேபோன்று இனிமேல் இலங்கையிலும் கல்வி கட்டமைப்பினுள் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் போது சித்தி பெற்றல் அல்லது சித்தி பெறவில்லை என்பதனை மாத்திரம் குறிப்பீடு செய்வதுடன் அதற்கு மாறாக புள்ளிகள் அடிப்படையில் முதலாமிடம், இரண்டாமிடம் என்ற தரப்படுத்தல்கள் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் வசதிகளுடன் கூடிய பாடசாலை கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் 64 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் கல்வி துறையின் பாரியளவிலான அபிவிருத்தி செயற்திட்டமான அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் குடாகத்நோருவ ஸ்ரீ சித்தார்த மஹா வித்தியாலயத்தில் 34 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கல்விக்கான கற்றல் வள நிலையம் மற்றும் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் போட்டித்தன்மையுடன் கூடிய பரீட்சையாக இருப்பதனால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகள் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு முடியாமல் போயியுள்ளது. பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை தரப்படுத்துவது தேவையற்ற விடயமாகும்;. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு என்னுடைய ஆலோசனைகளின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் மாணவர்களுக்கான ; தரப்படுத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.