இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியுமான குழுவினர் எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனே கைக்கோர்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வடமேல் மாகாண இளைஞர்கள் மாநாடு குளியாபிட்டிய நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
புதிதாக சிந்திக்கும் தலைமுறையை உருவாக்குவது எமது குழுவின் நோக்கமாகும். கல்வி துறையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கை ஒரு சிறந்த உதாரணமாகும். இதன்படி உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும். முன்னேற்றம் காணும் உலகை எல்லை தாண்டி சென்று அறிவினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எமது சிறார்களுக்கு வழங்கும் நோக்கில் டெப் கணிணி வழங்கப்படுகின்றது என்றார்.