புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிபர்களுக்கான சேவை ஆரம்ப பயிற்சி ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பம்...
பாடசாலை கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக தகைமைகளுடன் கூடிய விசேட தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ திறமைகளுடனான அதிபர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்விஅமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்புக்காக புதிதாக அதிபர்கள் 1858 பேரை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி குறித்த அதிபர்களுக்கான ஆரம்ப சேவைக்கான பயிற்சி ஒக்டோபர் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2019-10-02 முதல் 2019-11-13 திகதி வரை நடத்தப்படவுள்ள குறித்த பயிற்சியானது, நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்பிரகாரம் முதற்கட்டத்தின் கீழ் அதிபர் பயிற்சிக்காக பதிவி செய்யும் நடவடிக்கைகள் மஹரகம தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் மஹரகம மத்திய கல்லூரியில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என் ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
புதிய அதிபர்களுக்கு வலய கல்வி காரியாலத்தினுள் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் மாகாண பிரதிநிதிகளின் தொடர்பாடலின் ஊடாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொண்டு இரு வார பயிற்சி வழங்குவதற்கும், மூன்றாம் கட்டமாக மாகாண பயிற்சி மத்திய நிலையத்தில் இரு வார வதிவிட பயிற்சி வழங்குவதற்கும்,நான்காம் கட்டமாக வேலை செய்யும் 7நாட்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் சிறார்களின் கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் தீர்மானங்களை எந்தகாரணத்திற்காகவும் தாமதம் செய்யாது உடன் அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதற்காகவே புதிய அதிபர்களை உடன் பாடசாலை கட்டமைப்புக்கு இணைத்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக கல்வி அமைச்சர், சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதன்படி புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 1858 அதிபர்களுடன் 2015 முதல் இதுவரை 5759 அதிபர்கள் பாடசாலை கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பிரதிபலன்கள் வேகமாக மாணவர்கள் வசமாகிறது...
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள்,பிரிவெனாவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட சுரக்சா மாணவர் காப்புறுதி திட்டத்தின் பயன்கள் வேகமாக மாணவர்கள் வசமாகி வருகின்றன .2018 டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் சுரக்சா மாணவர் காப்புறுதியை வழங்குவதற்காக கல்வி அமைச்சுடன் அலியான்ஸ் நிறுவனம் கைகோர்த்தது.
சுரக்சா காப்புறுதியின் ஊடாக 5-21 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுகாதார காப்புறுதி, விபத்து காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி ஆகியவைக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சுக்கு கிடைத்த புதிய புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம் 1,340 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை காப்பீடாக மாணவர்களுக்கு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது. இதுவரையான காலப்பகுதியில் காப்பீட்டுக்காக 29,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று(03) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி விசேட மாநாட்டில் கல்வி அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆற்றிய உரை...
எமது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக்கும் நோக்கில் இன்றைய மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. கட்சி பிளவுப்படுவதனை தடுத்து சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து கட்சியை ஐக்கியப்படுத்தியமைக்கு இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரதமரின் செயலானது தற்போது காணப்படும் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் அரசியல் போட்டியில் கண்டுக்கொள்ள முடியாத முன்னுதாரணமாகும்;
சுதந்திரத்திற்கு பின்னர் உருவான நாட்டின் பழைமையான கட்சிகள் பல தற்போது பிளவுப்பட்டுள்ளன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படாமல் தடுப்பதற்கு கட்சி தலைமைத்துவம் முன்னின்று செயற்பட்டமையினால் எம்மால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முடிந்ததோடு மாத்திரமின்றி நவம்பர் 16 ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கவும் முடியும். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் அமரவைப்பதற்கு நிபந்தனைகள் எதுவுமின்றி அனைவரும் பாடுப்பட வேண்டும். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதன் மூலம் எமது கட்சியை ; பாதுகாக்கவும் தற்போது எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதற்கும் முடியும். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ஒருவர் எமது கட்சிக்கு கிடைக்காமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட எமது கட்சியினருக்கு நீதியை நிலைநாட்ட முடியாமல் போனது. இவ்வாறான அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் ஒன்றரை மாதத்தில் தீர்வு கிடைக்கும்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையினால் பொதுஜன பெரமுனவினர் பெரும் துக்கத்திலும் சோகத்திலும் உள்ளனர். வேட்பாளரை தெரிவு முடியாமல் நாம் பிளவுப்படுவோம் என எதிர்க்கட்சியினர் நினைத்ததோடு மாத்திரமின்றி எமது பங்காளி கட்சிகளும் பிரிந்து செல்லும் என்றே கருதினர். எனினும் எதிர்க்கட்சியினரின் இவ்வாறான பகல்கனவுகளுக்கு சஜித் பிரேமதாச சரியான பதிலை வழங்கியுள்ளார்.
அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம். அதுமாத்திரமின்றி எதிர்வரும் 10 ஆம் திகதி காலி முகத்திடலில் நடக்கவுள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் இலட்ச கணக்கான மக்களை அழைத்து வந்து எமது பலத்தை நாம் காட்டுவோம் என்றார்
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கல்வி நவீனமயப்படுத்தும் திட்டங்களை தடுத்து நிறுத்த ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர். டெப் கணிணி வழங்கும் திட்டத்திற்கு சேறு பூசி அதற்கு குந்தகம் விளைவிக்க முனைகின்றனர். உலகத்தின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் நாட்டின் கல்வி துறையை நவீனமயப்படுத்தி மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க முற்படுகின்றோம். சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட தரமான டெப் கணிணிகளையே மாணவர்களுக்கு வழங்குவோம். எனவே டெப் கணிணி தொடர்பாக அரசியல்வாதிகள் முன்வைக்கும் உண்மைக்கு புறம்பான செய்திகளை கேட்டு பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் குழுஅறையில் இன்று(24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நவீன தொழில்நுட்பத்துடன் உலகம் அதிக வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது. இரு மாதங்களில் மாற்றம் காணும் அளவிற்கு தொழில்நுட்பத்தின் வேகம் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. அந்த வேகத்துடன் நாமும் இணைந்து பயணிக்க வேண்டும். இதற்காக கல்வி துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க திட்டமிட்டுள்ளோம். எனினும் எதிர்கால தலைமுறைக்கு நவீன தொழில்நுட்பத்தை வழங்கும் திட்டத்தை தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ; பெற்றோர், மாணவர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முனைகின்றார். 'சஹ்ரானின் குண்டு வெடிப்புகளை பார்க்கிலும் அகிலவின் டெப் கணிணி பாரதூரமானது' என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். இந்த கருத்தானது, குறுகிய அரசியல் நோக்கத்திற்காக டெப் கணிணி வழங்கும்; திட்டத்திற்கு சேறு பூசி அதற்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியாகும். சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி,தரமான டெப் கணிணியை வழங்கவே நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் வழங்கவுள்ள டெப் கணிணியில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையையே நாம் இலங்கையிலும் கொண்டு வர முனைகின்றோம். உலகின் பல நாடுகளில் டெப் கணிணி மூலமாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதுமாத்திரமின்றி உதய கம்மன்பில கூட டெப் கணிணி உபயோகம் செய்கின்றார். அப்படியாயின் அவருக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவர் எந்நேரமும் டெப் கணிணி உபயோகம் செய்து வருகின்றார்.
கணிணி தொழில்நுட்பத்தினால் மேலதிமாக தகவல்களை மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். சம்பிரதாய பூர்வமாக பாடப்புத்தகங்களை மாத்திரம் கொண்டு மாணவர்களின் அறிவை வளர்க்க முடியாது. நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு வழங்குவதன் ஊடாக மேலதிக தகவல்களை கொண்டு தொழில்நுட்ப துறையில் முன்னேற முடியும். டெப் கணிணி வழங்கும் முறைமையானது கல்வி அமைச்சின் புரட்சிகரமான நடவடிக்கையாகும். எனவே அரசியல் நோக்கத்திற்காக இதனை தடுக்கவே முயற்சிக்கின்றனர். இந்த நடவடிக்கை காரணமாக அச்சு புத்தகத்திற்கான செலவுகளை கூட குறைக்க முடியும்;. டெப் கணிணி வழங்கும் விடயத்தில் ஒரு சிலருக்கு ஆரம்பித்தில் இருந்தே பிரச்சினை உள்ளது. எனவே இந்த தடைகளை தாண்டி எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக டெப் கணிணியை வழங்குவோம். ஆரம்பத்தில் தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கு வழங்குவதுடன் இன்னும் சில மாதங்களில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள உயர்தர மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க நடவடிக்கை எடுப்போம். அத்துடன் எதிர்காலத்தில் 6 ஆம் வகுப்பு முதல் உள்ள அனைத்து மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்க திட்டமிட்டுள்ளோம்.
தேசிய பாடசாலைகளுக்கு நுழைய மாணவர்களுக்கு வாய்ப்பு
கல்வி அமைச்சினால் இதுவரை செய்யாத பாரிய புரட்சிகரமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன்படி தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு இதுவரை கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு 45,000 மாணவர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. தமிழ் மூலமான பாடசாலைகளில் மாத்திரம் 15,000 வெற்றிடங்கள் உள்ளன. எனினும் நாம் தேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்குள்ள வெற்றிடங்களை ஆராய்ந்து அதன் பின்னர் குறித்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு பாடசாலைகளையும் பெயரிட்டு குறித்த பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்புகளிலும் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கையும் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஒழுங்குமுறைகளையும் பத்திரிகைகளில் விளம்பரமாக பிரசுரித்தோம். இதன்படி முதற்கட்டமாக 4000 மாணவர்களை தேசிய பாடசாலைகளில் இணைத்துக்கொண்டுள்ளோம். இதற்கான அனுமதி பத்திரங்களை குறித்த மாணவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆசிரியர் பயிலுனர்கள் 8000 பேர் இணைப்பு
கல்வியியற் கல்லூரிகளுக்கு முதற்தடவையாக ஒரே தடவையில் ஆசிரியர் பயிலுனர்கள் 8000 பேரை இணைத்துக்கொண்டுள்ளோம். இதற்கான நிகழ்வு இடைநிறுத்தப்பட்டமையினால் தபால் மூலமாக 8000 பேருக்கான நியமனங்களை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதிய அதிபர்கள் நியமனம்
அத்துடன் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் வகுப்பு புதிய அதிபர்கள் 2000 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான நிகழ்வினை எம்மால் நடத்த முடியாவிடினும் அவர்களுக்கான நியமன பத்திரங்களை பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 4000 அதிபர்களை பாடசாலை கட்டமைப்பில் இணைத்துக்கொண்டோம். இதுவரையான காலப்பகுதியில் 6000 புதிய அதிபர்களை பாடசாலை கட்டமைப்புக்காக இணைத்துக்கொண்டுள்ளோம். மேலும் அதிபர்களுக்கான பதவி உயர்வுகளையும் முறையாக முன்னெடுத்துள்ளோம். இது கல்வி அமைச்சின் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இதற்கு மேலதிகமாக அருகிலுள்ள பாடசாலை சிறந்தப பாடசாலை திட்டத்தின் ஊடாக பாடசாலைகளில் காணப்படும் குறைப்பாடு நிவர்த்தி செய்து வருகின்றோம். நகர பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்கி வருகின்றோம். மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், மலசல கூட வசதிகளையும் நாம் பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம் என்றார்.
இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்புக்காக புதிய அதிபர்கள் 1,858 பேரை இணைத்துக்கொள்வதற்காக நாளை அலரிமாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு தற்காலிக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.